வரகு காய்கறி பிரியாணி |
சோளம் காய்கறி பிரியாணி |
தேவையான பொருட்கள்:
- வரகு அரிசி – 1 குவளை (150 கிராம்)
- தண்ணீர் – 3 குவளை
- கேரட் மற்றும் பட்டர் பீன்ஸ் – மொத்தம் 200 கிராம்
- பீட்ரூட் – 2 தேக்கரண்டி
- தக்காளி – 2 (நடுத்தர அளவு)
- சிறிய / பெரிய வெங்காயம் – 1/2 குவளை
- இஞ்சி, பூண்டு விழுது – 1 1/2 தேக்கரண்டி
- கொத்தமல்லி தழை – 1/2 குவளை
- புதினா இலை - 10
- நல்லெண்ணை – 2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 1
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
- மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி
- இந்துப்பு – சுவைக்கேற்ப
- பட்டை – 1 துண்டு (1 இன்ச் நீளமுள்ளது)
- கிராம்பு – 3
- பிரியாணி இலை – 2
- கல்பாசி - 1 தேக்கரண்டி
- பிரியாணி மசாலா பொடி – 1 தேக்கரண்டி
பிரியாணி மசாலா பொடி தயாரிக்கும் முறை:
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் மிக்ஸியில் இட்டு பொடி செய்து, காற்று புகாதவாறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி மூடி வைக்கவும். எந்த வகையான பிரியாணி தயாரிக்கும் பொழுதும், இந்தப் பொடியைத் தேவையான அளவு சேர்த்துக் கொண்டால், அது பிரியாணிக்கு அருமையான வாசனையைத் தரும்.
- பட்டை – 10 கிராம்
- கிராம்பு – 10 கிராம்
- ஏலக்காய் - 10 கிராம்
செய்முறை:
- சமைப்பதற்கு முன்னர் வரகை 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
- தேவையான காய்கறிகளை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். அதேபோல் வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி, தனித்தனி பாத்திரங்களில் தயாராக வைக்கவும். இஞ்சி, பூண்டு விழுது அரைக்கவும். கொத்தமல்லி தழை, புதினா இவற்றை கழுவி பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். பிரியாணி மசாலா பொடி தயாரித்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணை ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் கல்பாசி போட்டு வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் கொத்தமல்லி தழை, புதினா சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், முழு பச்சை மிளகாய் போட்டு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் அனைத்துக் காய்கறிகளையும் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு 1 தேக்கரண்டி பிரியாணி மசாலா பொடி போட்டு கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி காய்கறியை மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும்.
- குக்கரில் தண்ணீரை ஊற்றி, அது கொதிநிலைக்கு வந்ததும் வரகை போடவும். பின்னர் வாணலியில் உள்ள கலவை முழுவதையும் குக்கருக்கு மாற்றவும். தேவையான அளவு இந்துப்பு சேர்த்து குக்கரை மூடவும். முதல் விசில் வந்த பிறகு, தீயைக் குறைத்து 8 நிமிடங்கள் காத்திருந்து, அடுப்பை அணைக்கவும்.
- குக்கர் ஆவி போன பின்பு, சாதத்தை ஒரு அகலமான தட்டில் கொட்டி பரப்பி விடவும். இரண்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும். ஏதாவது ஒரு வகை ராய்தாவுடன் பரிமாறவும்.
- இந்த செய்முறையை, என் தாயாரிடம் கற்றுக் கொண்டேன். அவர்கள் பிரியாணி செய்ய, சீரக சம்பா எனப்படும் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றை உபயோகிப்பார்கள். நான் அதற்கு பதில் வரகு எனும் சிறுதானியத்தை பயன்படுத்தியுள்ளேன். இதே செய்முறையில் குதிரைவாலி மற்றும் சாமை அரிசிகளையும் உபயோகிக்கலாம்.
- வெங்காயம் மற்றும் பூண்டு பயன்படுத்தாதவர்கள், அதை மட்டும் தவிர்த்து விடவும்.
- அசைவ வகை பிரியாணி செய்யும் போது, வாணலியில் மசாலா பொருட்களை வதக்குவதற்கு பதிலாக குக்கரை பயன்படுத்தவும். காய்கறிக்கு பதில் கோழிக்கறி / ஆட்டுக்கறி போட்டு வதக்கி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி கறியை நன்றாக வேக வைக்க வேண்டும். கறி வெந்த பின்னர், மீதமுள்ள தண்ணீரை ஊற்றி கொதித்ததும் வரகை சேர்த்து வேக வைக்கவும்.
No comments :
Post a Comment