Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Friday, January 2, 2015

குறள் கூறும் மருத்துவம்


இங்குள்ள கருத்துக்கள், 'இயற்கை மருத்துவச் செம்மல்' திரு. G.பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் எழுதிய 'இயற்கை வாழ்வியலின் மகிமை' எனும் கையேட்டிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

வெளியேறாமல் உடலில் தங்கி விட்ட கழிவு வண்டல்களே நோயின் அடிப்படைக் காரணமாகும். அங்ஙனம் வெளியேறாமல் தங்கிவிட்ட கழிவுப் பொருள்களை வெளியேற்றும் பணியைச் செய்யக்கூடியவாறு, உணவுப் பொருள்களை மருந்தாக உபயோகிக்க, இயற்கை வாழ்வியல் மக்களுக்குக் கற்றுத் தருகிறது.

இதுபற்றி வள்ளுவரும் மிகத்தெளிவாக சொல்லுகிறார்:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது 
அற்றது போற்றி யுணிண்
இங்கு வள்ளுவர் அற்றது எனக் குறிப்படுவது வெளியேறாமல் உடலில் தங்கி விடுகின்ற கழிவு வண்டல்களைக் குறிக்கும். 



அதுவே உடற்பிணிகள் னைத்துக்கும் காரணமென்பதை உணர்த்த:
அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு
என இரண்டாம் முறையாக அற்றால் என வெளியேறாத கழிவுப் பொருள்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.  அதுமட்டுமல்ல, உடலை விட்டு அவ்வப்போது வெளியேறிவிட வேண்டிய கழிவுப் பொருட்கள் முறையாக வெளியேறி விடுவதே நெடிதுய்க்க, அதாவது நீண்ட ஆயுளுடன் வாழ வழியாகும் என்பதையும் இடித்துரைக்கின்றார். 

இவ்வுண்மையை, மனிதன் மிகவும் அசட்டை செய்கிறான் என்பதை உணர்த்தத்தானோ என்னவோ வள்ளுவர் மூன்றாவது முறையாகவும் அடுத்த குறட்பாவில்:
அற்ற தறிந்து கடைபிடித்து மாறல்ல
துய்க்கத் துவரப் பசித்து
என மூன்றாவது முறையாக அற்றது என்ற சொல்லைச் சொல்லி தெளிவுபடுத்துகிறார். அதோடு மட்டுமல்ல, அற்றது, அற்றால் அற்றதறிந்து என்று மும்முறை ஒரே சொல்லைச் சொல்லி ஒரு பொருளை உணர்த்த வந்த வள்ளுவர் இதனை மேலும் ஒரு படி மேலே சென்று சுட்டிக்காட்டுகிறார்:
இழிவறிந் துண்பான்கண் இன்பம் போல் நிற்கும்
கழிபே ரிரையாண்கண் நோய்
இழிவானதாகிய கழிவுப்பொருள் உடலை விட்டு நீங்குவதே உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை. நீங்காமல் தங்குவதே உடற்பிணிக்கு மூல காரணமென்பதை உணர்த்துகிறார்.

வள்ளுவப் பெருந்தகை இங்ஙனம் தெளிவாகக் கூறியிருக்கின்ற வாழ்வே இயற்கை வாழ்வாகும். அது இயற்கை மருத்துவமுமாகும்.

உடலை விட்டு வெளியேறாமல் பல கழிவுப் பொருட்கள் உடலில் தங்கி விடக்காரணம் மனிதனுடைய தவறான உணவுப் பழக்கமேயாகும். அத்தகைய தவறான உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றி, மாறுபாடில்லா உண்டியை உண்ணும் உடல்நல உயர்விற்கான வாழ்க்கையைப் பற்றி போதிப்பது இயற்கை வாழ்வியலாகும்.

4 comments :