- நாட்டு சோளம் – 3/4 குவளை (150 கிராம்)
- பாசிப் பருப்பு – 3 மேசைக்கரண்டி
- காய்கறிகள் (கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, காலிஃப்ளவர்) – 1/2 குவளை
- வெங்காயம் – 1/4 குவளை
- மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
- இந்துப்பு – தேவைக்கேற்ப
- கொத்தமல்லித் தழை – 2 கொத்துகள்
- நல்லெண்ணை – 1 தேக்கரண்டி
- கடுகு – 1/4 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
- பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை:
- முழு நாட்டு சோளத்தை குறைந்தது 12 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும். சமைக்கும் முன்னர், தண்ணீரில் நன்கு அலசி, நீரை முழுவதும் வடித்து விட்டு, குக்கரில் போடவும். அதில் 3 1/2 குவளை நீர் ஊற்றவும். அதில் சில துளிகள் நல்லெண்ணை ஊற்றி, 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் போட்டு, குக்கரை மூடி அடுப்பில் வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை மிதமான சூட்டில் வைத்து, குறைந்தது 15 நிமிடங்கள் வேகவிடவும். ஆவி போன பிறகு, குக்கரைத் திறக்கவும். சோளம் முழுமையாக வெந்திருந்தால், அதை அப்படியே மூடி வைத்துவிடவும்.
- ஒரு வாணலியில், பாசிப்பருப்பைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதனை தனியே நன்றாக வேகவைத்து வைத்துக் கொள்ளவும். குழைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
- மற்றொரு பாத்திரத்தில், நல்லெண்ணை ஊற்றவும். அது சூடானதும், தாளிக்க வேண்டிய பொருட்களை இங்கு தரப்பட்டுள்ள வரிசைப்படி, ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள அனைத்து காய்கறிகளையும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பின்னர் மீதமுள்ள மிளகாய் தூளையும் கலந்து, பாத்திரத்தை மூடி காய்கறிகளை வேகவிடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளிக்கவும். காய் வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- இப்பொழுது சோளம் இருக்கும் குக்கரில், வேகவைத்த பாசிப்பருப்பு மற்றும் காய்கறிகள் கலவையை சேர்த்து நன்கு கிளறவும். சுவைக்கேற்ப இந்துப்பு சேர்க்கவும். ஒருவேளை கிச்சடியில் நீர் அதிகம் இருந்தால், குக்கரை மூடி மிதமான சூட்டில் வைக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி, பரிமாறும் பாத்திரத்திற்கு கிச்சடியை மாற்றவும்.
குறிப்பு:
- நீண்ட நாட்களாகவே, எனக்கு முழுமையான நாட்டு சோளம் மற்றும் கம்பு தானியங்களை வைத்து சமைக்க வேண்டும் எனும் எண்ணம் இருந்தது. ஏனெனில், சிறுதானியங்களைப் பொறுத்தவரை, அவற்றை மாவாக்கி சமைக்காமல், முழுமையான தானியங்களாகவே சமைத்தால், அவற்றின் சத்துக்கள் நமக்கு பரிபூரணமாகக் கிடைக்கும். ஆனால் அவற்றை சமைக்க அதிக நேரம் தேவைப்படுமோ எனும் சந்தேகத்தினால், நான் அவற்றை முயற்சிக்கவில்லை. சமீபத்தில் இணையதளத்தில் பார்த்த சமையல் செய்முறைகளின் மூலம், எனது சந்தேகம் நீங்கியது. இந்த செய்முறை, நான் வெவ்வேறு குறிப்புகளிலிருந்து கற்றுக் கொண்டு, மாற்றம் செய்து தயாரிக்கப்பட்டுள்ளது.
- சோளத்தை எவ்வளவு நேரம் ஊறவைக்க முடியுமோ, அவ்வளவு அதிக நேரம் ஊற வைப்பது நல்லது. இதனால் சமைப்பதற்கு ஆகும் நேரம் குறையும். சோளத்தை முளைகட்ட வைத்து சமைப்பது மிகவும் சிறந்தது.
- விருப்பப்பட்டால் காய்கறிகளை வதக்கும் போது, சில துண்டுகள் தக்காளி சேர்த்துக் கொள்ளலாம்.
- எல்லா சிறுதானிய உணவுகளைப் போன்றே, இந்த கிச்சடியையும், ஓரளவு சூடாக இருக்கும் பொழுதே சாப்பிட வேண்டும். ஆறிவிட்டால், சோளம் சிறிது கடினமாக மாறிவிடும்.
No comments :
Post a Comment