- நாட்டு சோள மாவு – 1 குவளை (150 கிராம்)
- தண்ணீர் - 1 குவளை (150 மில்லி) மாவு தயார் செய்ய
- இந்துப்பு – 1 சிட்டிகை
- வெல்லம் – 1/2 அல்லது 3/4 குவளை
- தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
- ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி
- ஒரு பாத்திரத்தில் சோள மாவுடன் இந்துப்பை கலந்து கொள்ளவும். அதில் நன்கு கொதிக்க வைத்த 1 குவளை தண்ணீரை, சிறிது சிறிதாக ஊற்றி, கரண்டியால் கிளறவும். சுடுநீரின் சூட்டில் மாவு மிருதுவான தன்மையை பெற்று விடும். மாவின் சூடு சற்றுத் தணிந்ததும், கையால் மாவு முழுவதையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- இட்லி தட்டில், ஈரத்துணியைப் போடவும். இப்பொழுது சிறிதளவு மாவை மட்டும் உள்ளங்கையில் எடுத்து, அதை சிறிய உருண்டைகள் மற்றும் நீளமான தட்டை வடிவங்களில் கொழுக்கட்டையாக உருட்டி இட்லி தட்டில் போடவும். பெரிய எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை தனியே எடுத்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ளவும். மீதமிருக்கும் மாவு முழுவதையும், முன்பு கூறியது போல் சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- இட்லி பாத்திரத்தில் தட்டை வைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேகவிடவும். பதம் பார்ப்பதற்கு, ஓரிரண்டு கொழுக்கட்டைகளை எடுத்து, ஈர விரலால் தொட்டுப் பார்க்கவும். விரலில் மாவு ஒட்டாமல் இருந்தால், அடுப்பை அணைக்கவும்.
- இப்பொழுது சோள மாவு கலந்த பாத்திரத்தில் 2 குவளைகள் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் தனியே கரைத்து வைத்திருக்கும் சோள மாவை ஊற்றி, கரண்டியால் கிளறிக் கொண்டே இருக்கவும். மாவு நன்கு வெந்து கட்டியாக வரும் பொழுது, அதில் பொடித்து வைத்த வெல்லத்தைப் போட்டு கட்டிகள் கரையும் வரை கிளறவும். பின்னர் ஏற்கனவே வெந்திருக்கும் கொழுக்கட்டைகளை இந்தப் பாத்திரத்தில் போட்டு கிளறவும். அடுப்பை அணைத்து விட்டு, ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து ஒருமுறை நன்றாக கிளறி விட்டு, சூடாக பரிமாறவும்.
குறிப்பு:
- இது வழக்கமாக நமது வீடுகளில் பால் கொழுக்கட்டை செய்யும் முறை ஆகும். அரிசி மாவிற்கு பதில் அதிக சுவை மற்றும் ஆரோக்கியம் தரக்கூடிய நாட்டுச் சோள மாவில் செய்துள்ளேன்.
- உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து வேக வைப்பதற்கு பதில், கொழுக்கட்டைப் பால் தயாரிக்கும் பாத்திரத்திலேயே சற்று அதிகளவு நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைத்து அதில் சிறிது சிறிதாக போட்டு வேக வைக்கலாம். இதுவும் வீடுகளில் பொதுவாகப் பின்பற்றப்படும் ஒரு முறைதான்.
- இயற்கை விளைபொருட்கள் கடைகளில் நாட்டுச் சோளம், அரைத்த மாவு வடிவில் கிடைக்கும். இல்லையென்றால் முழு நாட்டு சோளத்தை வாங்கி, சுத்தம் செய்து, வெயிலில் சற்று நேரம் காய வைத்து, பின்னர் மாவு மில்லில் அரைத்து வைத்துக் கொள்ளவும். வெயில் அதிகம் இல்லையென்றால் சோளத்தை வாணலியில் சிறிது சிறிதாகப் போட்டு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வறுத்து, ஆற வைத்து, பின்னர் மில்லில் அரைக்கவும். இவ்வாறு செய்யும் பொழுது மாவு அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.
- கொழுக்கட்டை நன்கு வெந்திருந்தாலும், சாப்பிடும் பொழுது சற்று ஒட்டும் தன்மையுடனேயே இருக்கும். என்னுடைய அனுபவத்தின் படி, வறுக்காமல் அரைக்கப்படும் சிறுதானியங்கள், வேக வைக்கப்படும் போது ஒட்டும் தன்மையுடன் இருப்பதைக் காண்கிறேன்.
No comments :
Post a Comment