கொழுக்கட்டை தயாரிக்க:
- சோள மாவு – 200 கிராம்
- தண்ணீர் – 200 மில்லி
- இந்துப்பு – 1 சிட்டிகை
தாளிக்க:
- நல்லெண்ணை – 1/2 தேக்கரண்டி
- கடுகு – 1/4 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- பெருங்காய தூள் – 1 சிட்டிகை
- காய்ந்த மிளகாய் – 1
- கறிவேப்பிலை – 2 கொத்து
- தேங்காய் துருவல் – 4 தேக்கரண்டி
- இந்துப்பு – சுவைக்கேற்ப
- ஒரு பாத்திரத்தில் சோள மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் இந்துப்பை கலக்கவும்.
- மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த சுடுநீரை சிறிது சிறிதாக மாவில் ஊற்றி, கரண்டியால் கிளறவும். மாவை நன்றாக சேர்த்துக் கிளறி முடிக்கும் வரை, சுடுநீர் பாத்திரத்தை அடுப்பில், சூட்டிலேயே வைக்கவும். மாவு மிகவும் சூடாக இருந்தால், பாத்திரத்தை மூடி, சற்று நேரம் ஆற விடவும்.
- மாவில் சூடு சற்று குறைந்த பிறகு, சப்பாத்தி மாவு பிசைவது போல், கைகளால் உருட்டி, பிசைந்து கொள்ளவும். மாவில் ஒரு பகுதியை, பிட்டு எடுத்து, இடது உள்ளங்கை விரல்களுக்கு அருகில் வைத்துக் கொள்ளவும். அதில் இருந்து சிறிதளவு மாவை மட்டும் பிட்டு எடுத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். அல்லது நீளமாக உருட்டி, ஒரு விரலால் லேசாக அழுத்தி, தட்டையாக்கவும். இதுபோல மாவு முழுவதையும் உருட்டிக் கொள்ளவும்.
- பின்னர் இட்லி பாத்திரத்தில் உருண்டைகளை வைத்து ஆவியில் 10 நிமிடங்கள் வரை வேக விடவும். உருண்டை வெந்து விட்டதைத் தெரிந்து கொள்ள, விரலை தண்ணீரில் லேசாக நனைத்து விட்டுத் தொட்டுப் பார்க்கவும். மாவு விரலில் ஒட்டாமல் இருந்தால், அடுப்பை அணைத்து விடவும்.
- ஒரு வாணலியில் எண்ணை ஊற்றவும். அது சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு போட்டுத் தாளிக்கவும். பெருங்காயத்தூள் சேர்க்கவும். காய்ந்த மிளகாய் போடவும். கருவேப்பிலை போடவும். ஒரு நிமிடம் பிரட்டி விட்டு வேக வைத்து எடுத்த கொழுக்கட்டைகளை அதில் கலக்கவும். கடைசியில் இந்துப்பு மற்றும் தேங்காய் துருவல் போட்டு நன்றாக கிளறி விடவும். அடுப்பை அணைத்து விடவும். சூடாக சாப்பிடவும்.
குறிப்பு:
- நான் இந்த செய்முறையை ஒரு வலைப்பூவில் கற்றுக் கொண்டேன். இது செய்வதற்கு மிகவும் எளிதான சிற்றுண்டி ஆகும். நமது வீடுகளில் உப்புக் கொழுக்கட்டை என்று பச்சரிசி மாவில் வெறும் கொழுக்கட்டை மட்டும் செய்து அதனுடன் தேங்காய் துண்டுகளை கடித்து சாப்பிடுவதுண்டு. சோள மாவில் செய்யப்பட்ட இந்தக் கொழுக்கட்டையையும் அதே போன்று வெறும் தேங்காய் துண்டுகள் மட்டும் வைத்து சாப்பிட்டு பார்த்தோம். அதுவே மிகவும் சுவையாக இருந்தது. விருப்பப்பட்டால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கவும்.
- அதுபோன்றே பரிசோதனை முயற்சியாக சிறு கொழுக்கட்டைகளை வைத்து ஃப்ரைட் கொழுக்கட்டை (ஃப்ரைட் ரைஸ் போன்று) செய்து பார்த்தோம். அதுவும் நன்றாக இருந்தது.
- அல்லது உங்களுக்கு விருப்பமான பயறு வகை குழம்புகளில் கொழுக்கட்டையைப் போட்டு தேக்கரண்டியில் எடுத்து சாப்பிடலாம்.
No comments :
Post a Comment