வெண்பூசணி அல்வா |
தேவையான பொருட்கள் (இரண்டு நபருக்கு):
- வெண்பூசணி (தோல் நீக்கி துருவியது) – 2 குவளைகள் (400 கிராம்)
- மண்டை வெல்லம் / நாட்டுச் சர்க்கரை / பனங்கல்கண்டு தூள் – 1/2 குவளை (80 கிராம் தோராயமாக)
- ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
- முந்திரிப்பருப்பு – 2 தேக்கரண்டி
செய்முறை:
- வெண்பூசணித் துண்டைத் தோல் நீக்கி, பெரியத் துருவல்களாக துருவி, அதில் இரண்டுக் குவளைகள் அளந்து எடுத்துக் கொள்ளவும்.
- துருவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் ஏற்றி மூடி வைத்து சிறிது நேரம் வேகவிடவும். பூசணிக்காய் அதில் இருக்கும் நீரின் அளவிலேயே நன்கு வெந்துவிடும். எனவே மேற்கொண்டு தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அவ்வப்போது மூடியை மட்டும் திறந்து வெண்பூசணித் துருவலைக் கரண்டியால் அடிபிடிக்காமல் இருப்பதற்காக கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
- வெண்பூசணித் துருவல் நன்றாக வெந்த பின்னர், அதனுடன் உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு மண்டை வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு தூள், இவற்றில் ஏதாவது ஒன்றினைப் போட்டு நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். இந்தக் கலவை முழுவதும் நன்கு திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும். அப்போது அடுப்பை அணைத்து விடவும்.
- இக்கலவையில் ஏலக்காய் தூள் மற்றும் வெறும் பாத்திரத்தில் வறுத்து தயாராக வைத்துள்ள முந்திரிப் பருப்புத் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். இந்த அல்வாவை, சூடாகவோ, சற்று வெதுவெதுப்பாகவோ அல்லது ஆறிய பிறகோ, உங்களுக்கு விருப்பமான சூட்டில் சாப்பிடவும்.
குறிப்பு:
- இணையத்தில் வெண்பூசணி அல்வா (காசி அல்வா) செய்முறைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் அனைவரும் அல்வாவில் நெய் மற்றும் வெள்ளை சீனி பயன்படுத்துகின்றனர். இவை இரண்டையும் தவிர்த்து சாத்வீக முறையில் அல்வா தயாரிக்கலாம் என்று முயற்சி செய்து பார்த்தேன். வெண்பூசணி அல்வா மிக சுவையானதாகவே அமைந்து விட்டது. எனவே அதே செய்முறையை இங்குப் பகிர்ந்துள்ளேன்.
- வெண்பூசணி துருவல் ஓரளவு வேக ஆரம்பிக்கும் போதே ஒளிபுகும் தன்மை / கண்ணாடி போன்ற தன்மை அடையும். அது போல் நன்றாக வெந்து விட்டாலும் குழைந்து விடாது. எனவே பூசணி துருவல் நன்றாக வெந்துள்ளதா என்பதை உறுதி செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். காய் நன்றாக வெந்த பின்னர் இனிப்பை சேர்த்தால் தான், காயால் இனிப்பை முழுமையாக உறிஞ்ச முடியும்.
- அதுபோல் நாம் வாங்கும் வெண்பூசணியின் தன்மையைப் பொருத்து அல்வாவின் சுவை மாறும். சில வகை காய்கள் சற்று புளிப்பாக இருக்கும். ஒரு சில வகைகள் சற்று புளிப்பு குறைவாக இருக்கும். ஒரு சில வகைகள் சதைப்பற்றுள்ளதாகவும், சில பஞ்சு போலவும் இருக்கும்.
- என்னுடைய சொந்தக் கருத்தின்படி, இனிப்பிற்கு பனம்கல்கண்டு சேர்க்கும் போது அது சீனியில் செய்த அல்வா போன்ற சுவையைத் தருவதாக தோன்றுகிறது. மண்டைவெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்க்கும் போது, அது சற்று புளிப்பு கலந்த இனிப்பு சுவையைத் தருகிறது. எனவே நீங்கள் இரண்டு விதமான இனிப்பு வகைகளையும் செய்து பார்த்து விட்டு, எது உங்களுக்கு விருப்பமானது என்பதனை முடிவு செய்து கொள்ளுங்கள்.
- இதே செய்முறையில் கேரட் அல்லது பீட்ருட் பயன்படுத்தியும் அல்வா தயாரிக்கலாம்.
- மற்றொரு வகை வெண்பூசணி அல்லா செய்முறை இதில் தரப்பட்டுள்ளது.
No comments :
Post a Comment