இயற்கை கேரட் அல்வா |
தேவையான பொருட்கள் (1 நபருக்கு):
- துருவிய கேரட் – 1 குவளை 150 கிராம்
- பேரிச்சம் பழம் – 6 எண்ணிக்கை
- இளம் தேங்காய் – 1 மூடி
- பாதாம் பருப்பு – 4 எண்ணிக்கை
- ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
- அல்வா தயாரிக்க ஒருநாள் முன்பு பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறப் போடவும். எட்டு மணிநேரத்திற்கு ஒருமுறை தண்ணீரை அலசி ஊற்றி விட்டு, மீண்டும் வேறு தண்ணீரை ஊற்றி வைக்கவும். மறுநாள் பருப்பு சற்று முளை விட்டிருக்கும். இந்தப் பருப்பை நீளவாக்கில் சற்றுப் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- பேரிச்சம் பழத்தை கொட்டை நீக்கி 8 மணிநேரம் முன்னதாக ஊற வைக்கவும். பின்னர் பழத்தை மட்டும் தனியே எடுத்து கரண்டியால் மசித்துக் கொள்ளவும்.
- கேரட்டைத் துருவிக் கொள்ளவும்.
- இளம் தேங்காய் வழுக்கையை மிக்ஸியில் போட்டு வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- இறுதியாக இவ்வனைத்துப் பொருட்களையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது கேரட் அல்வா சுவைப்பதற்கு தயார்.
- இந்த செய்முறையை வீடியோவில் பார்த்து, அதை சற்று மாற்றி செய்து பார்த்தோம். அல்வா மிகவும் சுவையாக அமைந்து விட்டபடியால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.
- தேங்காய் வாங்கும் போது பச்சையாக சாப்பிடுவதற்கு என்று கடையில் கேட்டால், இளசான காயாக தருவார்கள். அம்மாதிரியான காயின் பருப்பை அரைத்தால் மிகவும் மெல்லிசாக மாவு போன்று வரும். சற்று முற்றிய தேங்காயைப் பயன்படுத்தினால் அவ்வளவு நன்றாக இருக்காது.
- பாதாம் பருப்பு, பேரிச்சை, தேங்காய் ஆகியவற்றின் அளவுகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ செய்யலாம்.
- மேற்குறிப்பிட்ட வீடியோவில் கூறியுள்ளபடி, கேரட் அல்வாவை பால், நெய் அல்லது எண்ணை இல்லாமல் அடுப்பில் வைத்து சமைக்கும் முறையிலும் செய்யலாம். அதற்கான செய்முறையை மற்றொருப் பதிவில் பகிர்கிறேன்.
No comments :
Post a Comment