Featured Post

Sharing our 2.5 years of experience in Life Natural

தமிழில் We have been practicing Life Natural for more than two and a half years now. I have been thinking to write a post for the past ...

Friday, November 29, 2013

இயற்கை வாழ்வியல் என்றால் என்ன?




இங்குள்ள கருத்துக்கள், 'இயற்கை மருத்துவச் செம்மல்' திரு. G.பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் எழுதிய 'இயற்கை வாழ்வியலின் மகிமை' எனும் கையேட்டிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது.

இயற்கை வாழ்வியல் என்றால் என்ன?

இயற்கை வாழ்வியல் அல்லது இயற்கை மருத்துவம் என்ற துறை மிக மேன்மையான ஒன்று. காரணம் அத்துறை மெய் ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானம். உடலியக்கத்தையும், உயிரோட்டத்தின் மாறுபாடில்லா தன்மையையும் ஆதாரமாகக் கொண்டு செய்யப்படுகின்ற ஒரு மருத்துவம்.

இயற்கை வாழ்வியலின் தத்துவம்:

இவ்வுலக வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் அத்தியாவசியமானது நல்ல உடல் நலமும் மனநலமும் தான். ஏழையாய் இருப்பவன் நன்கு பணம் சம்பாதித்து தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்ளவும், செல்வம் மிகுந்தவன், அந்த செல்வத்தை அனுபவிக்கவும் முழுமையான உடல்நலம் அவசியம். இப்படிப்பட்ட உன்னதமான உடல்நலத்தை, காசு கொடுத்து கடையில் வாங்க முடியாது. உடல்நலம், மனநலம் என்னும் இரண்டு அம்சங்களும் இயற்கை விதிகளின்படி, வாழ்க்கை முறையை பின்பற்றி பெறப்படுபவை.

ஆனால், இந்த விஞ்ஞான உலகத்தில் மனிதன் விஞ்ஞான வளர்ச்சியினால் ஏற்பட்டிருக்கும் வசதிகளை அனுபவித்துப் பழகி விட்டான். அதனால் எல்லாவற்றையும் விஞ்ஞானத்தால் அடைந்து விட முடியும் என்ற மயக்கத்தில் திளைக்கிறான். இப்படி சகல துறைகளிலும் அறிவியல் மனிதனின் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்த, அந்த அறிவியல் அனைத்துக்கும் நிரூபணங்கள் கொடுப்பதே காரணம்.

விஞ்ஞானம் வளர்ந்து எவ்வாறு மனித சமுதாயத்திற்குப் பல நன்மைகளை வழங்கிக் கொண்டிருப்பது உண்மையோ, அதுபோல அது பல மடங்கு தீமைகளையும் விளைவித்துக் கொண்டிருப்பதையும் மறுக்க முடியாது. மனிதன், அறியாமையால் முழுமையாகத் தன்னை விஞ்ஞானத்திடம் அடகு வைத்துவிட்டான். அவன் இந்த அடிமை மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, விழிப்புணர்வு பெற்று, விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்பட்டிருக்கும் தீமைகளிலிருந்து விலகி, அதன் ஒளிமயமான வளர்ச்சியை மட்டும் வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்ள பழக வேண்டும்.

இவ்வாறு செய்வதனால், அவன் நன்மை, தீமை ஆகிய இரண்டையும் கொடுக்கும் அறிவியலிலிருந்து விலகி, நன்மையை மட்டுமே கொடுக்கும் மெய்ஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கை வாழ்வியலை மேற்கொள்வான். அதன் மூலம் அவனது வாழ்க்கையில் உடல்நலம், மனநலம், மனிதாபிமானப் பண்பு ஆகியவை மேலோங்கி வளரும்.

உடல், உயிராற்றல், மனம் ஆகிய மூன்றுக்கும் உள்ள தொடர்பு:

அறிவியலால் ஆய்வுக்கூட ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாத இரண்டு முக்கிய அம்சங்கள் மனித உடலில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒன்று உயிராற்றல். இரண்டாவது அவனது மனம். இந்த இரண்டு அம்சங்களையும் எந்தப் பரிசோதனைக் கூடத்தாலும், நவீன உபகரணங்களாலும் ஆராய்ச்சி செய்துவிட முடியாது.

உயிராற்றலை சோதனைக்கு உட்படுத்தப்பட முடியாது. ஆனால் அதன் இயக்கத்தை மின் ஆற்றலின் இயக்கத்தோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம். கண்ணால் காண முடியாத மின்னாற்றலை மின்விளக்குகளில் ஒளியாகவும், இயந்திரங்களில் இயக்கமாகவும், மைக்ரோபோனில் ஒலியாகவும், மின் அடுப்பில் வெப்பமாகவும் காண்கிறோம். இப்படி உயிராற்றலும் மனித உடலில் அவனது கண்களில் ஒளியாகவும், குரல் நாண்களில் ஒலியாகவும், உடல் முழுவதும் வெப்பமாகவும், இயக்கமாகவும் இயங்குவதை உணரலாம்.

இந்த உயிராற்றலானது மனித உடலில் மனோமயமாகவும் மிக நுட்பமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. மனதின் இயக்கம் மனித உடல் நலத்தின் மேன்மைக்கு முழுமுதற் காரணமான ஒன்றாகும். மனம் என்ற ஒன்றை, மூளை, இதயம், நுரையீரல், உணவுப்பாதை, எலும்பு மண்டலம் என்று பல்வேறு உறுப்புகளைப் பிரித்து ஆராய்ந்து காட்டுவது போல சுட்டிக் காட்ட முடியாது.

மனித உடலில் மனம் என்பது எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு விஞ்ஞான ரீதியான பதில் கிடையாது. ஆனால் மனம், மனசாட்சி என்ற கருத்துக்களை நாம் அதிகமாக உபயோகப்படுத்துகிறோம். இவற்றிற்கான விளக்கத்தை, மெய் ஞானத்தை அடியொற்றிய வேதாந்தரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் மட்டுமே உணர முடியும். உளவியலும் வேதாந்தமும் மனதை எண்ணங்களின் தொகுப்பு அல்லது கருத்துக்களின் கோவை என்றே விளக்குகிறது.

அப்படிப்பட்ட எண்ணங்களின் தொகுப்பாகிய மனதை மனித உடலுக்குள்ளே இங்கேதான் இருக்கிறது என்று சுட்டிக் காட்ட முடியாது. மனம் என்பது மனிதனுக்கு உள்ளேயும் வெளியேயும் பரவெளி முழுவதும் பரவி நிற்கின்ற ஒன்று. மனம் என்பது இந்த அண்ட சராசரத்தைப் போல் பரந்து விரிந்தது என்று இயற்கை வாழ்வியல் விளக்கம் கொடுக்கிறது.

மனமகிழ்ச்சியே மனிதனுக்கு ஆதாரமான முழு உணவு. இதையே கீதையில், 'மாசுச' என்று உபதேசிக்கிறார் பகவான். இதன் பொருள் கவலைப்படாதே என்பதேயாகும். இதைத் தான் வள்ளுவரும்,

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

என்கிறார். மனித வாழ்க்கையின் எல்லாத் தொல்லைகளுக்கும் பிறப்பிடம் மனம் தான். மனநலம் தான் உடல் நலத்தின் முன்னோடி. பாரதியார் தனது புதிய ஆத்திச்சூடியில், அச்சம் தவிர் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுவதிலிருந்தும் மனநலமே உடல் நல உயர்வுக்கு முழுமுதற் காரணம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

மனித உடலின் தன்மை:

மனித உடலானது பஞ்ச பூதங்களாலானது. அப்பஞ்சபூதங்களில் முதல் நான்கு பூதங்களான ஆகாயம், ஒளி, வாயு, நீர் ஆகியன மனிதனிக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உணவாகப் பயன்பட்டு இவ்வுடலைக் கட்ட உதவுவன. ஆனால் ஐந்தாவது பூதமாகிய மண் நேரடியாக மனித உடலுக்கு உணவாகப் பயன்படாது. மண்ணிற்கும் ஜீவராசிகளுக்குமிடையில் தாவரங்கள் உள்ளன.

அடிப்படை விதியான உடலியக்கம் என்ன சொல்கிறது? That mineral which does not come through the plant kingdom is not assimilated by the human system. இதனை மறுக்கவோ மீறவோ முடியாது. இது தேற்றம்.

அறிவியலாளர்களால் பட்டியலிட்டுக் கொடுக்கப்பட்டுள்ள தாது உப்புக்களும், மற்ற உணவின் பகுதிப் பொருள்களும், ஜீவ சத்துக்களான வைட்டமின்களும், தாவரங்களின் வாயிலாக வந்தாலன்றி அதை இவ்வுடல் தன்னுடைய பொருளாக மாற்றிக் கொள்ளும் தன்மையைப் பெற்றிருக்கவில்லை. அத்தகைய உணவுப் பொருள் எதுவானாலும், அது உடலில் அன்னியப் பொருளாக மட்டுமே தங்கி, உடல் ஆரோக்கியத்திற்கு குந்தகம் விளைவிக்கிறது.

மனித உடலில் அன்னியப் பொருட்கள் எவ்வாறு சேர்கின்றன?


  1. தாவரத்தின் மூலம் கிடைக்கப் பெறாத ஒரே ஒரு உணவுப் பொருள் சோடியம் குளோரைடு எனப்படும் உப்பு. அது நமது உடலின் வேதியியல் தன்மையை அமிலத்தன்மையாக மாற்றுகிறது.
  2. உணவுத் தொழிற்சாலைகளின் வாயிலாகப் பெறப்படுகின்ற, டப்பாக்களிலும், பாட்டில்களிலும் வருகின்ற அனைத்துப் பொருட்களிலும் பாதுகாப்புக்காக சேர்க்கப்படும் இராசாயனப் பொருட்கள் அனைத்தும் உடலில் தங்குகின்றன.
  3. மருத்துவம் என்ற பெயரில் மிதமிஞ்சி பயன்படுத்தப்படுகின்ற மருந்துகள், மனித இரத்தத்தின் இராசாயனத் தன்மையாகிய, காரத்தன்மையை அமிலத்தன்மை மிகுந்ததாக்குகிறது.
  4. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக்கொல்லிகள் ஆகியவை விளைபொருட்களிலும் கலக்கின்றன. அதை உண்பதால், அதில் உள்ள இராசாயனங்கள் மனித உடலில் தங்கி விடுகின்றன. 
  5. மனித உடலின் அடிப்படை செல்களாகிய குருதி, காரத்தன்மையுடையது. ஆனால் உணவுப் பழக்கமானது, அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.


இத்தகைய செயல்களினால், மனிதன் தன் உடலில் மண்ணின் தன்மை அதிகரிக்கும்படி செய்து கொள்கின்றான். அதன் விளைவாகத் தோன்றுவது சாதாரணமான சளி என்ற தொல்லை. அதனைப் புரிந்து கொள்ளாமல், அதனோடு போராட்டம் நடத்துகின்ற மருத்துவ முறைகள், உடலில் மென்மேலும் மண்ணின் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. பஞ்ச பூதங்களில் ஒன்றான, மண்ணில் புற்று வளர்வதைப் போல, இறுதியில் மனித உடலிலும் புற்று உண்டாகிறது.

மெய்ஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்ற இயற்கை வாழ்வியல், அடிப்படை விதியாகிய இதனை மக்களுக்கு போதித்து, மிக எளிய முறையில் எவ்வித பின் விளைவுகளும் இல்லாமல் உடல் நலத்தை உயர்த்த வழி செய்கிறது.

இயற்கை வாழ்வியல் கற்பிப்பது:


  1. இயற்கை வாழ்வியல் முதலில் கற்றுத்தருவது சமையலில் மறுமலர்ச்சி (Positive Cooking). அதன் மூலம் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உப்பின் உபயோகத்தைக் கூடுமான வரையில் உணவில் குறைக்கவும், சில சமயங்களில் உப்பே இல்லாமல் உணவை சுவை மிக்கதாக மாற்றவும் வழிமுறைகளை கற்றுத் தருகிறது.
  2. இரசாயனப் பொருட்கள் கலந்த எந்த ஒரு உணவுப் பொருளையும் உட்கொள்ளாது தவிர்த்தல்.
  3. உணவல்லாத பொருட்களை மருந்தாகப் பயன்படுத்தாதிருத்தல்.
  4. இரத்தத்தின் இரசாயனத் தன்மைக்கேற்ப உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளுதல். 
  5. கேரட், முட்டைக்கோஸ், பூசணி, சௌசௌ, நூல்கோல், முள்ளங்கி, நெல்லிக்கனி, வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை, அடுப்பில் ஏற்றாமலேயே உண்பதன் மூலம் வைட்டமின்கள் என்று சொல்லப்படுகின்ற ஜீவசத்துக்களும், தாது உப்புக்களும் உடலுக்கு முழுமையாகக் கிடைக்கின்றது. எனவே குறை நோய்கள் (Deficiency Diseases) தோன்றுவதில்லை. அதுபோல, சூரிய ஒளியின் திரவ ரூபங்களான அருகம்புல் சாறு, வல்லாரைச்சாறு, மணித்தக்காளிச்சாறு, துளசிச்சாறு, வில்வச்சாறு, வாழைத்தண்டுச்சாறு, நெல்லிக்கனிச்சாறு, ஆகியவற்றை சரியான முறையில் உணவுப் பொருளாகப் பயன்படுத்துவதன் மூலம், அவை மிகச் சிறந்த மருந்துப் பொருள்களாக அமைந்து, உயிராற்றலை ஊறுபாடின்றி இயங்க வைக்கும்.

இயற்கை வாழ்வியல் பொன்மொழிகள்

உள்ள நலமே உடல் நலத்தின் ஊற்று
மலச்சிக்கல் பல சிக்கல்
குடல் சுத்தம் உடல் சுத்தம்
உண்டி சுருங்க வாழ்வு பெருகும்
உண்டி பெருக வாழ்வு சுருங்கும்
கனி உண்டு பிணி போக்குவோம்
இயற்கை வாழ்வே இன்ப வாழ்வு

No comments :

Post a Comment