Aug.F.Reinhold எழுதிய ‘Louis Kuhne’s Facial Diagnosis’ என்ற புத்தகத்தின் பக்கங்கள் 101-102 லிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மூன்று எல்லை வரையறைக் கோடுகள் |
பசி உணர்வு:
இயற்கையான, எளிய மற்றும் சத்துக்கள் அடங்கிய உணவு வகைகளை விரும்பி உண்ணக் கூடிய வகையில் பசி உணர்வு ஏற்படுதல், உடலும் மனமும் நல்ல நிலையில் இருப்பதற்கான அறிகுறி. வயிறு முழுமையாக நிரம்பும் முன்னரே திருப்தி ஏற்பட வேண்டும். வயிறு நிரம்பியபடியான அல்லது அடைத்துக் கொண்டு இருக்கும்படியான சங்கடமான உணர்வு எழக்கூடாது. செரிமானம் அமைதியாகவும், நாம் உணர முடியாத வகையிலும் இருக்க வேண்டும்.
தாகம்:
தாகம் ஏற்படும் போது, பழங்கள் அல்லது நீர் அருந்துவதற்கான விருப்பம் மட்டுமே எழ வேண்டும்.
சிறுநீர்:
சிறுநீர், தெளிவாகவும், பொன்னிற மஞ்சள் நிறத்திலும் இருக்க வேண்டும். அது இனிப்பு, புளிப்பு மற்றும் காரம் போன்ற வாசனை அற்றதாக இருக்க வேண்டும். ஆவியானவுடன், கட்டியாக மாறக்கூடாது. வெளியேறும் பொழுது, எந்த வலியும் இல்லாமல் எளிதாக இருக்க வேண்டும்.
மலம்:
ஆரோக்கியமான விலங்குகளுக்கு இருப்பதைப் போல, மலம் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகவும், கட்டியாகவும், உருளை வடிவத்திலும் இருக்க வேண்டும். ஆசனவாயை அசுத்தப்படுத்தாமல் (ஒட்டாமல்) வெளியேற வேண்டும்.
வியர்வை:
வியர்வை, எந்த விதமான அருவெறுக்கத்தக்க வாசனையையும் கொண்டிருக்கக் கூடாது.
தோல்:
தோல், வெதுவெதுப்பாக, மென்மையாக, நெகிழ்வாக, ஓரளவு ஈரப்பசையுடனும் இருக்க வேண்டும். நெற்றி, தாடை எலும்பு மற்றும் பின்னங்கழுத்து கோடு ஆகிய பகுதிகளில் இருக்கும் தோல் விரலால் பிடித்து இழுக்கும் படி இருக்க வேண்டும். இந்தப் பகுதிகளில் உள்ள தோலுக்கும் எலும்புக்கும் இடையில் கொழுப்பு படிமம் இருக்கக் கூடாது. தோலின் எந்தப் பகுதியில் விரல் நுனியை வைத்து அழுத்தினாலும் ஏற்படும் சிறிய பள்ளம், விரலை நீக்கியதும் உடனே மறைய வேண்டும். தோலில் எவ்வித சுருக்கமும் இருக்கக் கூடாது.
நிறம்:
தோலின் நிறம் வெளிறியோ சிவந்தோ இருக்கக் கூடாது. பருக்கள், கரணை (warts), சீழ் வடியும் புண் ஆகியவை இருக்கக் கூடாது. எந்தப் பகுதியிலும் இறுக்கம், பளபளப்பு, நிறச்சிதைவு ஆகியவை தோன்றக் கூடாது.
தலை மயிர்:
தலை மயிர் முழுமையாகவும் அதன் இயற்கையான நிறத்திலும் இருக்க வேண்டும்.
கண்கள்:
கண்கள் தெளிவாகவும் பிரகாசமாகவும் இருக்க வேண்டும்.
சுவாசம்:
சுவாசம் எவ்வித சத்தமும் கஷ்டமும் இன்றி இருக்க வேண்டும். காற்றை மூக்கு வழியாக மட்டுமே உள்ளிழுப்பது தானாகவே நடக்கும் செயலாக வேண்டும்.
தூக்கம்:
தூக்கம் முழு ஓய்வானதாகவும், அமைதியாகவும், எந்தவிதமான தடையில்லாமலும் இருக்க வேண்டும்.
கழுத்து:
கழுத்தில் வீக்கம், கட்டி போன்றவை இருக்கக் கூடாது. கழுத்து தசைகள் அசைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
அடிவயிறு:
மென்மையாகவும் உள் அடங்கியும் இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்கும் எந்த விலங்கும் பெருத்த வயிறுடன் இருப்பதில்லை.
தலை:
தலை சமச்சீரான வடிவத்திலும், உடலின் மையக்கோட்டுப் பகுதியிலும் இருக்க வேண்டும்.
சரிவிகிதம்:
உடலின் இரு பகுதிகளும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டும்.
தோள்கள்:
இரு தோள்களும் ஒரே கிடைமட்டக் கோட்டில் இருக்க வேண்டும்.
உடல் உறுப்புகள்:
ஒரு மனிதனுடைய வயது, உடல் கட்டமைப்பு, குடியேற்றம் ஆகியவற்றை சார்ந்து, அனைத்து உடல் உறுப்புகளும் சரியான அளவு, சரிவிகிதம் மற்றும் உயிர்ப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும்.
மூன்று எல்லை வரையறைக் கோடுகள்:
தாடைக் கோடு, பின்கழுத்துக் கோடு, தொடைக் கோடு ஆகிய மூன்று எல்லை வரையறைக் கோடுகளும் தெளிவாக அறியப்பட வேண்டும். (புத்தகத்தில் உள்ள படத்தைக் காண்க)
நடை:
ஆரோக்கியமான மனிதனின் நடை நிமிர்ந்து இருக்கும். அவனுடைய அசைவுகள், தசைகளின் மீது கொண்டுள்ள கட்டுப்பாட்டை குறிக்கும்.
தட்பவெப்ப மாற்றம் அல்லது ஈரப்பதம் எந்த விதமான அசௌகரியத்தையும் ஏற்படுத்தாது.
மனம்:
மனம் எல்லா வகையிலும் சமநிலையுடன் இருக்க வேண்டும். ஆரோக்கியமான உடல் இருக்கும் ஒருவர், காணுதல், உண்ணுதல், செரிமானம், கழிவுப் பொருட்களை வெளியேற்றுதல் போன்ற, செய்கின்ற ஒவ்வொரு செயலிலும், மகிழ்ச்சியை கொண்டிருப்பர்.
ஆரோக்கியமான உடல், அனைத்து வேலைகளையும் எந்த வலியும், கடினமும், செயற்கை தூண்டுதலும் இன்றி செய்கிறது. எந்த நேரத்திலும் உடலில் உள்ள எந்த உறுப்பும் ஒருவருடைய கவனத்தை ஈர்க்கக் கூடாது. இது வயது குறைந்தவர்களுக்கும் வயதானவர்களுக்கும் பொருந்தும். தோல் அல்லது மூக்கிலிருந்து திரவக்கசிவு இருக்கக் கூடாது. எனினும், கோடைகாலத்தில் ஏற்படும் வியர்வையை, அசாதாரணமாக கருதக் கூடாது.
உடல் மற்றும் மனம் சார்ந்த அனைத்து உணர்ச்சிகளும், சோர்வு அல்லது அதிதீவிர உணர்வு இல்லாமல், சாதாரணமாக இருக்க வேண்டும். மனம் அல்லது உடல் முடங்கியிருந்தால், அது அசாதாரண நிலையாகும். ஒருவரது சாந்த தன்மையை, விரும்பத்தகாத தொந்தரவு அல்லது ஊசியால் குத்துதல் போன்ற செயல்கள் மூலம் கெடுக்கக் கூடாது.
No comments :
Post a Comment