கம்பு தபோலி (சாலட்) |
தேவையான பொருட்கள் (2 நபருக்கு):
- முழு கம்பு – 1 குவளை (200 கிராம்)
- பெரிய வெங்காயம் – 1 (நடுத்தர அளவு)
- தக்காளி – 1 (பெரியது)
- கொத்தமல்லி – 1 குவளை
- புதினா – 1 அல்லது 2 தேக்கரண்டி
- வெங்காயத்தாள் (Spring Onion) – 3 தேக்கரண்டி
- மிளகு – 7 அல்லது 8 எண்ணிக்கை
- இந்துப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
- முழு கம்பை ஒருநாள் முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் தண்ணீரால் ஓரிரு முறை நன்றாகக் கழுவி அலசி விட்டு, முளை கட்ட வைக்கவும். மூன்றாவது நாள் காலையில், கம்பு நன்றாக முளை கட்டியிருக்கும்.
- மீண்டும் கம்பை, நீரில் நன்றாகக் கழுவி விட்டு, குக்கரில் போடவும். அதில் 2.5 குவளை நீர் ஊற்றி, குக்கரை மூடி வேக விடவும். முதல் விசில் வந்ததும், தீயைக் குறைத்து வைத்து 10 நிமிடங்கள் வரை வேக விடவும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு, குக்கர் ஆவி போனதும், அதைத் திறந்து கம்பு நன்றாக வெந்திருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும். கம்பு வெந்திருந்தால், அதை மற்றொரு தட்டிற்கு மாற்றி நன்றாக ஆறவிடவும்.
- ஒரு அகலமானப் பாத்திரத்தில், கொத்தமல்லி, புதினா, வெங்காயத்தாள், பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொடிதாக நறுக்கித் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதில், ஆறிய கம்பைப் போடவும். அதனுடன், மிளகைப் பொடித்துப் போடவும். மேலும் சுவைக்கேற்ப இந்துப்பை சேர்த்து, அனைத்துப் பொருள்களையும் நன்றாகக் கிளறி விடவும். ஒரு ஐந்து நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து விட்டுப் பின்னர் சாப்பிடவும். அனைத்துப் பொருட்களும் நன்றாகக் கலந்து நல்ல சுவையுடனும், மணமுடனும் இருக்கும்.
குறிப்பு:
- தபோலி (Tabbouleh) எனப்படுவது, மத்திய கிழக்கு நாடுகளில், உடைந்த கோதுமையையும், பார்ஸ்லி எனப்படும் ஒரு வகை வாசனையானக் கீரையையும் பயன்படுத்தி செய்யப்படும் உணவு வகையாகும். நாங்கள் அதில் உடைந்து கோதுமைக்குப் பதில் முளைவிட்டக் கம்பையும், கொத்தமல்லியையும் பயன்படுத்தினோம். இந்த செய்முறை நன்றாக இருப்பதனால், அதை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.
- கம்புக்குப் பதிலாக, நாட்டுச் சோளத்தையும் இதே முறையில், முளை கட்ட வைத்து தபோலி தயாரிக்கலாம்.
No comments :
Post a Comment