- குதிரைவாலி அரிசி – 1 குவளை (150 கிராம்)
- தண்ணீர் – 2 1/4 குவளை
- மாங்காய் - 1 (150 கிராம் துருவியது)
- கடுகு - 1/4 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- கடலைப் பருப்பு – 1 தேக்கரண்டி
- நிலக்கடலை – 2 தேக்கரண்டி
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- காய்ந்த மிளகாய் - 1
- கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
- கொத்தமல்லி தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
- இந்துப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
- சமைப்பதற்கு முன்னர் குதிரைவாலி அரிசியை 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும். குக்கரில்அரிசியை போட்டு நீர் ஊற்றி, அதில் சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். முதல் விசில் வந்த பிறகு, தீயை குறைத்து 8 நிமிடங்கள் கழித்து, அடுப்பை அணைக்கவும். குக்கர் ஆவி போன பிறகு, 10 நிமிடங்கள் கழித்து திறக்கவும். சாதத்தை ஒரு அகலமான தட்டில் பரப்பி சில நிமிடங்கள் ஆற விடவும். பிறகு மீண்டும் குக்கரில் போட்டு மூடி வைக்கவும். சாதம் உதிரியாக இருக்க வேண்டும்.
- மாங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும். தோலுடன் சீவியதும் நன்றாகவே இருந்தது. வறுப்பதற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக அடுப்பிற்கு அருகில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில், முதலில் நிலக்கடலையைப் போட்டு வறுத்து, தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு கடலைப் பருப்பை போட்டு, அது பொன்னிறமாகும் வரை மிதமான சூட்டிலேயே வறுக்கவும். நிறம் மாறியதும், உடனே கடுகு மற்றும் உளுந்தம் பருப்பைப் போடவும். கடுகு வெடித்ததும், காய்ந்த மிளகாயை இரண்டாக உடைத்துப் போடவும். உடனடியாகப் பெருங்காயத்தூளை சேர்க்கவும். அடுத்து துருவிய மாங்காயைப் போட்டு, அதில் மஞ்சள் தூளை சேர்க்கவும். நன்றாக வதக்கவும். பாத்திரம் அடி பிடிப்பது போல் இருந்தால், சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது நேரம் வாணலியை மூடி வைத்து வேகவிடவும். மாங்காய் நன்றாக வதங்கி, துவையல் போல் வரும். மாங்காய் நன்றாக வெந்து விட்டால், அடுப்பை அணைக்கவும்.
- ஏற்கனவே வேகவைத்து, ஆறவைத்துள்ள சாதத்தை இந்தக் கலவையில் சேர்த்து நன்றாக கிளறி விடவும். மேலும் இக்கலவையுடன், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கியக் கொத்தமல்லி தழை, சுவைக்கேற்ப இந்துப்பு மற்றும் வறுத்த நிலக்கடலை ஆகியவற்றை சேர்த்துக் கிளறவும். இப்போது எண்ணை இல்லாத மாங்காய் சாதம் சுவைப்பதற்குத் தயார்.
- இந்த செய்முறையை, நான் வலைத்தளத்தில் கற்றுக் கொண்டேன். இயற்கை வாழ்வியலின் கருத்துப்படி, அதே செய்முறையில் எண்ணை இல்லாமல், சிறுதானியத்தை வைத்து சமைத்துப் பார்த்தேன். உணவின் சுவை எந்த வித்தியாசமும் இன்றி, நன்றாகவே உள்ளது.
- இதே செய்முறையில் குதிரைவாலிக்கு பதிலாக, வரகு, திணை மற்றும் சாமை போன்ற சிறுதானியங்களையும் பயன்படுத்தலாம்.
No comments :
Post a Comment