ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு, இந்த வலைப்பதிவின் மூலம் எங்களது மகிழ்ச்சியை உங்களிடையேப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். புகழ்பெற்றக் கவிஞர் திரு.வைரமுத்து அவர்களின் 'மூன்றாம் உலகப்போர்' தொடர்கதையை ஆனந்த விகடன் இதழில் படிக்கத் தொடங்கியது முதல் எனக்கும் என் கணவருக்கும் இரசாயன உரங்கள் இடாத, இயற்கை வழி வேளாண்மை செய்ய வேண்டும் எனும் விதை மனதில் வேர் விட்டது. அதன் காரணமாகக் கடந்த ஐந்து வருடங்களாக விவசாயம் செய்வதற்கான நிலத்தைத் தேடிக் கொண்டிருந்தோம். இயற்கையின் ஆசிர்வாதத்தால், எங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு இந்தத் தோட்டம் சமீபத்தில் எனது கணவரின் பூர்வீக ஊருக்கு அருகிலேயே கிடைத்து விட்டது. இத்தோட்டத்திற்கு ‘வாழும் வனம்’ என்று பெயரிட்டுள்ளோம். இவ்வனம் அமைந்துள்ள இடத்தின் வரைபடம் கீழேத் தரப்பட்டுள்ளது. வனத்தின் புகைப்படங்களை வரைபடத்தில் காணலாம்.
பல வருடங்களாக நிலம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு, இந்தத் தோட்டத்தைக் கண்டுபிடித்து எங்களுக்குக் காண்பித்த எனது கணவரின் உடன்பிறந்த சகோதரர் திரு.கண்ணன் அவர்களுக்கும் மற்றும் உடன்பிறவா சகோதரர் திரு. அமுல்ராஜ் அவர்களுக்கும், மேலும் இந்தத் தோட்டத்தில் இத்தனை வருடங்களாக மரங்களை நட்டும் அவற்றை அதிக இரசாயனங்களைத் தெளிக்காமல் பராமரித்தும் வந்த அனைத்து நல்லிதயங்களுக்கும் இத்தருணத்தில் கோடானுகோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் இன்று வரை ஊக்கமளித்து வரும் நலம் விரும்பிகளுக்கும் மிக்க நன்றி. அதுபோலவே இனிமேல் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும், ஒவ்வொரு முயற்சிக்கும் உங்களுடைய ஆதரவும், ஆசிகளும் தொடரவேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோளாகும்.
தற்பொழுது இந்தத் தோட்டத்தில் தென்னை, செடி முருங்கை, அகத்தி, பலா, மா, கொய்யா ஆகிய மரங்கள் பலன் தரக்கூடிய நிலையில் உள்ளன. இனி வரும் காலங்களில், இங்கு ஜப்பானைச் சார்ந்த ‘எதுவும் செய்யாத வேளாண்மை’ முறையைக் கற்றுத்தந்த முன்னோடி விவசாயியான காலம் சென்ற அய்யா திரு. மசானபு ஃபுகோகா மற்றும் தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை உயிர்பெறச் செய்த காலம் சென்ற அய்யா திரு.நம்மாழ்வார் அவர்களின் அடிப்படைக் கருத்துக்களைப் பின்பற்றி, எங்களது தற்சார்பு வாழ்க்கைக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பழவகைகளை உற்பத்தி செய்யவிருக்கின்றோம். ‘வாழும் வனம்’ எனும் பெயருக்கேற்றபடி, இத்தோட்டத்தில் அனைத்து வகையான தாவரங்களை இடம்பெறச்செய்து அதன் மூலம் மற்ற பறவைகளும், உயிரினங்களும் தாமாகவே இத்தோட்டத்தில் வந்து வாழ்வதற்கான பல்லுயிர் சூழலை ஏற்படுத்த விழைகின்றோம்.

மேலும், நஞ்சில்லாத விளைபொருட்களை எவ்வாறு முறைப்படி உண்டு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வது என்று இயற்கை மருத்துவச் செம்மல் அய்யா திரு. ஜி. பாலகிருஷ்ணன் அவர்களிடமிருந்து நாங்கள் கற்றறிந்த ‘இயற்கை வாழ்வியல்’ முறைகளை, எங்களைப் போன்ற ஆரோக்கிய வாழ்க்கை வாழ்வது குறித்தத் தேடலில் இருக்கும் மற்ற அன்பர்களும், நண்பர்களும் எங்களுடன் வந்து சில நாட்கள் தங்கி, கற்றுக் கொள்வதற்கான தளமாகவும் இவ்வனத்தை அமைக்க உள்ளோம். அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிறைவுற்ற பின்னர் அது குறித்தத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.