சோள மாவு உருண்டை |
- சோள மாவு – 1 குவளை 200 கிராம்
- மண்டை வெல்லம் – 1/2 குவளை / 100 கிராம்
- ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
- முழுப்பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
- நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணை – 50 மில்லி
உருண்டை செய்வதற்குத் தேவையான மாவை இரண்டு விதமான முறைகளில் தயாரிக்கலாம். கீழே தரப்பட்டுள்ளவற்றில் உங்களுக்கு ஏற்ற ஒரு முறையைப் பின்பற்றவும்.
- சோளத்தை 1 கிலோ அளவில் வாணலியில் போட்டு, சிறு தீயில் வறுத்துக் கொள்ளவும். சோளம் பொரியாக வெடிக்க ஆரம்பிக்கும்போது, அடுப்பை அணைத்து விடவும். சோளம் ஆறிய பின்னர், மாவு மில்லில் நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் 1 குவளையை உருண்டை செய்ய எடுத்துக் கொள்ளவும்.
- ஏற்கனவே கடையில் வாங்கிய வறுக்காத மாவு வீட்டில் இருந்தால், அதில் 1 குவளை எடுத்து வெறும் வாணலியில் போட்டு மிதமான சூட்டில் இடைவிடாமல் வறுக்கவும். மாவிலிருந்து நல்ல வாசம் வந்ததும், அடுப்பை அணைத்து விடவும். மாவை நன்றாக ஆற விடவும்.
செய்முறை:
- மண்டை வெல்லத்தைப் பொடிக்கவும். பின்பு அதை மிக்ஸியில் போட்டு, அதனுடன் சோள மாவையும் சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும். இப்பொழுது வெல்லமும் மாவும் நன்றாகக் கலந்து விடும். இதனை ஒரு வாயகன்ற பாத்திரத்திற்கு மாற்றவும்.
- ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- இதில் பொட்டுக்கடலையை ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு மாவை நன்றாகக் கிளறி விடவும்.
- ஒரு சிறு கிண்ணத்தில் நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணையை ஊற்றி அடுப்பில் மிதமான சூட்டில் வைத்து லேசாக சூடாக்கவும். பின்னர் அதை மாவு இருக்கும் பாத்திரத்தில் ஊற்றி, மாவை நன்கு கலக்கவும்.
- சிறிது சிறிதாக மாவைக் கையில் எடுத்து, உள்ளங்கையில் அழுத்தி உருண்டைகளாகப் பிடிக்கவும்.
குறிப்பு:
- இந்த செய்முறையை நான் வலைத்தளத்தில் கற்றுக் கொண்டேன். அதில் ஒரு சில மாற்றங்கள் செய்திருக்கின்றேன்.
- மாவில் எண்ணை ஊற்றி உருண்டை பிடிக்கும் முன், இனிப்பு தேவையான அளவில் உள்ளதா என சரிபார்க்கவும். இனிப்பு குறைவாக இருந்தால், இன்னும் சிறிது மண்டை வெல்லம் பொடித்து சேர்த்துக் கொள்ளவும்.
- அதுபோல், உருண்டை பிடிக்கும் போதும், ஒருவேளை மாவு நன்கு ஒட்டாமல் உடைந்து கொண்டே இருந்தால், இன்னும் 2 அல்லது 3 தேக்கரண்டி எண்ணையை சுட வைத்து மாவுடன் பிசைந்து கொள்ளவும்.
- ஒவ்வொரு எண்ணையும் ஒவ்வொரு விதமான வாசனையையும், சுவையையும் தரும். ஆகவே நீங்கள் இரண்டு வகைகளையும் செய்து பார்த்து விட்டு, உங்களுக்கு விருப்பமான எண்ணையைத் தேர்வு செய்யலாம்.
- இயற்கை வாழ்வியிலின் கருத்துப்படி, எண்ணை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். நாம் வழக்கமாக நெய்யினால் பிடித்த மாவு உருண்டைகள் சாப்பிட்டு பழகி இருப்போம். ஒருவேளை மாவு உருண்டை சாப்பிட விரும்புபவர்கள், நெய்யைத் தவிர்த்து விட்டு அதற்குப் பதிலாக எண்ணை பயன்படுத்தலாம் என்பதற்காக இந்த செய்முறைத் தரப்பட்டுள்ளது. எண்ணையை முற்றிலும் தவிர்க்க நினைப்பவர்கள், இதே சிறுதானிய மாவில் எண்ணை இல்லாத பொரிவிளங்காய் உருண்டை செய்து சாப்பிடலாம்.
- இதே செய்முறையில் கம்பு மற்றும் கேழ்வரகு மாவைப் பயன்படுத்தியும் உருண்டைகள் செய்யலாம்.
நல்ல பதிவு
ReplyDeleteமிக்க நன்றி . தங்களின் இந்த பதிவை இப்போது தான் காண முடிந்தது. தவறியதற்கு வருந்துகிறோம்.
Delete