சோள பொரிவிளங்காய் உருண்டை |
தேவையான பொருட்கள் - 10 முதல் 12 எண்ணிக்கை:
- சோள மாவு – 1 குவளை (200 கிராம்)
- மண்டை வெல்லம் – 1/2 குவளை (100 கிராம்)
- ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
- முழுப்பொட்டுக்கடலை – 2 தேக்கரண்டி
- எள் – 1 தேக்கரண்டி
- தண்ணீர் – 1/2 குவளை (100 மில்லி)
உருண்டை செய்வதற்குத் தேவையான மாவை இரண்டு விதமான முறைகளில் தயாரிக்கலாம். கீழேத் தரப்பட்டுள்ளவற்றில் உங்களுக்கு ஏற்ற ஒரு முறையைப் பின்பற்றவும்.
- சோளத்தை 1 கிலோ அளவில் வாணலியில் போட்டு, சிறு தீயில் வறுத்துக் கொள்ளவும். தானியம் பொரியாக வெடிக்க ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்து விடவும். தானியம் ஆறிய பின்னர், மாவு மில்லில் நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த மாவில் 1 குவளையை உருண்டை செய்ய எடுத்துக் கொள்ளவும்.
- ஏற்கனவே கடையில் வாங்கிய வறுக்காத மாவு வீட்டில் இருந்தால், அதில் 1 குவளை எடுத்து வெறும் வாணலியில் போட்டு மிதமான சூட்டில் இடைவிடாமல் வறுக்கவும். மாவிலிருந்து நல்ல வாசம் வந்ததும், அடுப்பை அணைத்து விடவும். மாவை நன்றாக ஆற விடவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் சோள மாவை போடவும். அதனுடன் ஏலக்காய் தூள், வறுத்த எள் மற்றும் பொட்டுக்கடலையைப் போட்டு மாவை நன்றாகக் கிளறிக் கொள்ளவும்.
- இன்னொரு பாத்திரத்தில் மண்டை வெல்லத்தைப் பொடித்துப் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி நன்குக் கரைய விடவும். வெல்லம் முழுவதும் கரைந்த பின்னர், கரைசலை வடிகட்டி விட்டு, பின்னர் அடுப்பில் வைத்து காய்ச்சவும். ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரை ஊற்றி தயாராக வைத்துக் கொள்ளவும். எட்டு முதல் பத்து நிமிடங்களில் வெல்ல நீர் சிறிது சிறிதாகக் கட்டிபட ஆரம்பிக்கும். அதில் ஒரு சில துளிகளை எடுத்துக் கிண்ணத்தில் இருக்கும் தண்ணீரில் ஊற்றவும். வெல்லப்பாகு சரியான பதத்திற்கு வந்து விட்டால், தண்ணீரில் கரையாமல் அப்படியே நிற்கும். உடனே அடுப்பை அணைத்து விட்டு, வெல்லப்பாகை மாவுப்பாத்திரத்தில் ஊற்றி கரண்டியால் நன்றாகக் கிளறவும்.
- இப்போது மாவின் சூடு சற்றுக் குறைந்திருக்கும். எனவே மாவை கையால் ஒரு முறை சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பின்னர் மாவைக் கையில் எடுத்து, சிறுசிறு உருண்டைகளாகப் உருட்டிப் பிடிக்கவும்.
- இது வழக்கமாக வீடுகளில் பொரிவிளங்காய் செய்யும் முறைதான். இந்த செய்முறையில், அரிசி மாவிற்குப் பதில் சோள மாவைப் பயன்படுத்தி இருக்கின்றேன்.
- வெல்லப்பாகு மிகவும் கட்டியாகி விடாமல் சரியானப் பதத்தில் அடுப்பை அணைக்க வேண்டும். அப்போது தான் உருண்டை மிகவும் கடினமாக மாறாது.
- ஒருவேளை பாகு ஊற்றிய பிறகு, உருண்டை பிடிக்க முடியாத அளவு மாவு உதிரியாக இருந்தால் சிறிதளவு நீரை காய்ச்சி மாவில் ஊற்றி நன்கு பிசைந்து பின் உருண்டை பிடிக்கவும்.
- வழக்கமாக உருண்டையில் எள், தேங்காய், நிலக்கடலை, பொட்டுக்கடலை ஆகியவற்றை எண்ணை அல்லது நெய்யில் வறுத்துப் போடுவதுண்டு. இயற்கை வாழ்வியலின் படி, எண்ணைப் பயன்படுத்தக் கூடாது என்பதனால், இதில் எள்ளை வெறும் வாணலியில் வறுத்தும், பொட்டுக்கடலையை வறுக்காமல் முழுதாகவும் போட்டுள்ளேன்.
- சோள மாவு உருண்டையை சிறிதளவு எண்ணை மட்டும் பயன்படுத்தியும் தயாரிக்கலாம். அதன் செய்முறை இங்குத் தரப்பட்டுள்ளது.
- இதே செய்முறையில் கம்பு மற்றும் கேழ்வரகு மாவைப் பயன்படுத்தியும் பொரிவிளங்காய் உருண்டைகள் செய்யலாம்.
No comments :
Post a Comment