குக்கரில் பேக் செய்த கோதுமை கேக் |
தேவையான பொருட்கள் (2 நபருக்கு):
- கோதுமை மாவு – 1 குவளை (200 கிராம்)
- மண்டை வெல்லம் நாட்டுச் சர்க்கரை பனங்கற்கண்டு – 1 குவளை (200 கிராம்)
- தண்ணீர் – 1 1/2 குவளை (250 முதல் 300 மில்லி தோராயமாக)
- காய்ந்த ஈஸ்ட் – 1/2 தேக்கரண்டி
- ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
- முந்திரிப் பருப்பு - விருப்பத்திற்கேற்ப
- தேங்காய் அல்லது நல்லெண்ணை – 1/4 தேக்கரண்டி
கேக் தயாரிக்க ஆகும் நேரம்:
- மாவு தயாரிக்க – 10 நிமிடங்கள்
- மாவை நொதிக்க வைக்க – 2 மணிநேரங்கள்
- கேக் மாவை விரும்பும் அச்சுக்களுக்க மாற்ற - 10 நிமிடங்கள்
- கேக்கை பேக் செய்ய – 30 நிமிடங்கள்
செய்முறை:
- ஒரு அகலமாகப் பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளவும்.
- மற்றொருப் பாத்திரத்தில் மேலேக் குறிப்பிடப்பட்டுள்ள இனிப்பு வகைகளில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு, ஏதாவது ஒன்றைப் போட்டு சிறிதளவு நீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். இனிப்பைக் கட்டியில்லாமல் கரைய விடவும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு, அக்கரைசலை சற்று வெதுவெதுப்பாகும் வரை ஆற விடவும். பின்னர் இக்கரைசலை கோதுமை மாவு இருக்கும் பாத்திரத்தில் ஊற்றவும்.
- காய்ந்த ஈஸ்டை செயலூக்கம் (activating) செய்தல்: ஒரு டம்ளரில் பாதி அளவு வெதுவெதுப்பான நீர் ஊற்றி, அதில் 1 தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரைப் போட்டு நன்கு கலக்கவும். பின்னர் அக்கரைசலில் ஈஸ்டைப் போடவும். அந்த டம்ளரை நகர்த்தாமல், அப்படியே அதே இடத்தில் வைத்திருக்கவும். ஒரு சில நிமிடங்களில் ஈஸ்ட் அனைத்தும் நீருக்குள் மூழ்கி, பின் நுரைத்த தன்மையுடன் மீண்டும் நீரின் மேல் மட்டத்திற்கு வரும். அதோடு புளித்த பழச்சாறின் நெடியும் வரும். உடனடியாக இந்தக் கரைசலை, ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் மாவுப் பாத்திரத்தில் ஊற்றவும்.
- இப்போது மீதமுள்ள நீரை ஊற்றி, அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கட்டியில்லாமல், இட்லி மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தை மூடி ஒரு ஓரத்தில், குறைந்தது இரண்டு முதல் அதிகபட்சம் நான்கு மணிநேரம் வரை தனியாக வைத்து விடவும். இப்போது கேக் மாவு நொதித்து சரியான பக்குவத்திற்கு வந்திருக்கும்.
- இதற்கிடையே முந்திரிப்பருப்பை வெறும் வாணலியில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து ஆற வைத்து, பின்னர் அதனை சற்று சிறிய துண்டுகளாக உடைத்து வைத்துக் கொள்ளவும்.
- கேக்கை வேகவைக்கும் முன்னர், பாதி அளவு முந்திரிப்பருப்புத் துண்டுகளை கேக் மாவில் போடவும். அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து, மாவை நன்றாக கலக்கவும்.
- அடுத்ததாக நமக்கு கேக் எந்த விதமான வடிவத்தில் வேண்டுமோ, அதற்கேற்ப எவர்சில்வர் பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த அச்சின் உட்புறம் ஒரு சில துளிகள் எண்ணை ஊற்றி, தடவி விடவும். இப்போது தயாராக உள்ள கேக் மாவை அச்சில் பாதி அளவு வரை ஊற்றவும். அதன் மேல் மீதமுள்ள முந்திரிப்பருப்புகளைத் தூவிவிடவும்.
குக்கரில் பேக் (Bake) செய்தல்:
- வீட்டில் இருக்கும் 5 அல்லது 7 லிட்டர் குக்கரை எடுத்துக் கொள்ளவும். அதில் இருக்கும் கேஸ்கட் மற்றும் விசிலை அகற்றி விடவும்.
- வெறும் குக்கரில் 1 இன்ச் அளவுக்கு மணலை நிரப்பி, வெறும் மூடியைப் போட்டு அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் சூடாக்கவும்.
- பின்னர் மூடியைத் திறந்து அதில் ஒரு எவர் சில்வர் வளையத்தை வைத்து, அதன் மேல் ஒரு அகலமானத் தட்டை வைக்கவும். அதற்கு மேல் கேக் மாவு இருக்கும் பாத்திரத்தை வைத்து குக்கரை மூடவும். அரை மணிநேரத்தில் கேக் வெந்த வாசனை வரும்.
- இப்போது மூடியைத் திறந்து ஒரு கூர்மையான குச்சியை வைத்து கேக்கின் நடுவில் குத்தி, குச்சியை வெளியே எடுத்துப் பார்க்கவும். குச்சியில் மாவு ஒட்டாமல் இருந்தால் கேக் வெந்து விட்டது என்று அர்த்தம். இப்போது அடுப்பை அணைத்து விடவும்.
- கேக் பாத்திரத்தை இடுக்கி உதவியுடன் வெளியே எடுத்து சற்று நேரம் ஆற விடவும். பின்னர் ஒரு தட்டில் கவிழ்க்கவும். கேக் ஒட்டாமல் தனியே விழும். எடுப்பதற்கு சிரமமாக இருந்தால் ஒரு தேக்கரண்டியைப் பயன்படுத்தவும். கேக்கை ஆற வைத்து, சிறிது நேரம் கழித்து சாப்பிடவும். கேக்கை பேக் செய்யும் முறையை எளிதாகப் புரிந்து கொள்ள, இந்த வீடியோவைக் காணவும்.
- வழக்கமாக கேக் தயாரிப்பதற்கு மைதா, வெள்ளை சீனி மற்றும் நொதிப்பதற்குப் பலவிதமான இரசாயனங்களைப் பயன்படுத்துவார்கள். இப்படி உடலுக்குத் தீமை செய்யக் கூடிய எவ்விதப் பொருளும் இல்லாமல், சாத்வீக முறையில் கேக் தயாரிப்பது எப்படி என்பதை இணையதளங்களில் தேடிப் பார்த்தேன். அப்படிப் பார்த்த வீடியோக்களில் இருந்துக் கற்றுக் கொண்டவற்றை வைத்து இந்த கேக் செய்முறையைத் தந்துள்ளேன்.
- ஒருவேளை உங்களுக்கு, இங்குக் கூறியிருக்கும் செய்முறையை முதன்முதலில் படிக்கும் போது, கேக் தயாரிப்பது மிகவும் நேரம் ஆகும் செய்முறையாகவோ அல்லது சிக்கலான ஒன்றாகவோக் கூடத் தோன்றலாம். ஆனால் ஒருமுறை மட்டும் நீங்கள் செய்து பார்த்து விட்டால், அதன் பின்னர் மிகமிக எளிதானதாக ஒன்றாக ஆகிவிடும்.
- காய்ந்த ஈஸ்ட் பேக்கட் மளிகை கடைகள் அல்லது சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும். இதை வாங்கி வீட்டில் வைத்துக் கொண்டால் கேக் மற்றும் பிரட் தயார் செய்வதற்கு அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
- கேக் மாவின் கலவை மிகவும் கெட்டியாகவோ அல்லது தண்ணீராகவோ இருக்கக் கூடாது. எனவே தண்ணீர் ஊற்றும் போது சற்று கவனமாகக் கையாளவும். ஒருவேளை நீர் அதிகமாகி விட்டாலும், சிறிது கோதுமை மாவைக் கலந்து கொள்ளவும். அல்லது கட்டியாக இருந்தாலும் சற்று நீர் ஊற்றி, அதற்கு ஏற்ப இனிப்பின் அளவையும் சரி செய்து கொள்ளவும்.
- கேக்கை இட்லிப் பாத்திரத்தில் வேகவைத்தும் தயாரிக்கலாம். அதன் செய்முறையைத் தெரிந்து கொள்ள இந்த வலைப்பதிவைக் காணவும். கேக்கை வேக வைக்கும் முறையில் அதன் ருசி ஒரு விதமாகவும் பேக் செய்யும் முறையில் அதன் ருசி வேறொரு விதமாகவும் இருக்கும். இரண்டு முறைகளையும் செய்து பார்த்து விட்டு, உங்களுக்கு எந்த முறைப் பிடித்துள்ளது என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
- நான் சிறுதானிய மாவு வகைகளை (சோளம் மற்றும் கம்பு) மட்டும் வைத்து, இதே முறையில் கேக் செய்து பார்த்தேன். ஆனால் அது நன்றாக வரவில்லை. இணையதளத்தில் இது குறித்துத் தேடியபோது, அதில் அனைவரும் கோதுமை மாவையும் சேர்த்தே செய்திருந்தார்கள். இயற்கை வாழ்வியல் கருத்துக்களின் படி, ஒரு நேரத்தில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட விதமான தானியத்தை (கார்போஹைட்ரேட்) மட்டுமே சாப்பிட வேண்டும் என்கின்ற காரணத்தினால், அந்த முறைகளை முயற்சிக்க விரும்பவில்லை.
No comments :
Post a Comment