கேரட் அல்வா |
- கேரட் – 250 கிராம்
- மண்டை வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை – 75 கிராம்
- தண்ணீர் – 50 மில்லி
- முந்திரிப் பருப்பு – 25 கிராம்
- ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
- கேரட்டை சுத்தம் செய்து விட்டு, நீளவாக்கில் நறுக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து வேக விடவும். 15 முதல் 20 நிமிடங்களில் நன்றாக வெந்து மென்மையாக மாறிவிடும். இப்போது அடுப்பை அணைத்து விட்டு கேரட்டை ஆறவிடவும். பின்னர் கேரட்டை பெரியதாக அல்லது சிறியதாக துருவி வைத்துக் கொள்ளவும்.
- வெறும் வாணலியில் சிறிது முந்திரிப்பருப்பை மட்டும் வறுத்து ஆற வைத்து, தனியாக வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள முந்திரியை சற்று கொரகொரப்பான இருக்கும் அளவுக்குப் பொடித்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் மண்டை வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரையைப் போட்டு, கட்டிகள் நன்றாகக் கரையும் வரை சூடாக்கவும். ஒருவேளை வெல்லத்தில் ஏதாவது தூசி இருப்பதாகத் தோன்றினால், சர்க்கரைக் கரைசலை வடிகட்டி விட்டு, பின்னர் கரைசலை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
- சர்க்கரைக் கரைசல் சற்று கட்டியாகத் தொடங்கும் போது, கேரட் துருவலை சேர்த்து நன்றாக கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும். பத்து நிமிடங்களில் இனிப்பு முழுவதையும் கேரட் நன்றாக உறிஞ்சி கட்டியாக ஆரம்பிக்கும்.
- இப்போது பொடித்து வைத்துள்ள முந்திரிப் பருப்பை சேர்த்து, மீண்டும் கிளறவும். சிறிது நேரத்தில் அனைத்துப் பொருட்களும் ஒன்றாகக் கலந்து அல்வா போன்று நன்குத் திரண்டு வரும். இப்போது அடுப்பை அணைத்து விடவும்.
- ஏலக்காய் தூள் மற்றும் வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்புகளைப் போட்டு ஒருமுறை நன்றாகக் கிளறிவிடவும். இப்பொழுது கேரட் அல்வா தயார். இதை சூடாகவோ அல்லது வெதுவெதுப்பாகவோ சாப்பிடவும்.
குறிப்பு:
- பால் பொருட்கள் சேர்க்காமல், அல்வா செய்யும் வீடியோக்களை யூடியூப்பில் தேடிக் கொண்டிருந்தேன். அப்படிக் கிடைத்த இந்த வீடியோ செய்முறையை சற்று மாற்றியமைத்து, இயற்கை கேரட் அல்வாவும், மேலேத் தரப்பட்டுள்ள அடுப்பில் வைத்து செய்யக் கூடிய அல்வாவும் செய்து பார்த்தோம். இரண்டும் நன்றாக வந்திருந்தது.
- உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு, இனிப்பின் அளவைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்து கொள்ளலாம். இனிப்பிற்கு மண்டை வெல்லத்திற்குப் பதிலாக பனங்கற்கண்டையும் பயன்படுத்தலாம்.
No comments :
Post a Comment