இந்த வலைப்பதிவைத் தொடர்ந்து படித்து வரும் அன்பர்கள் ஒரு சிலருக்கு இயற்கை வாழ்வியலுக்கு மாறவேண்டும் எனும் விருப்பம் எழலாம். அவ்வாறு ஒருவேளை விருப்பம் இருந்தாலும், இங்குத் தரப்பட்டுள்ள உணவு முறைகளை உடனடியாக முழுமையாகப் பின்பற்ற ஒரு சிலருக்கு இயலாமல் போகலாம். மாற்றத்தை எங்கிருந்துத் தொடங்குவது என்ற சந்தேகம் எழலாம். காலம் காலமாக நம் சமுதாயத்தில் நடைமுறையில் இருக்கும் பழக்கவழக்கங்களை திடீரென்று மாற்றுவது அத்தனை சுலபமாக அனைவருக்கும் இருக்காது.
நாங்கள் ஒருவார காலம் இயற்கை வாழ்வியல் பணிமனையில் தங்கி இருந்து, இவ்வகையான உணவுகளை உண்டு, எங்கள் உடல் மற்றும் மன ரீதியில் ஏற்பட்ட நல்ல மாற்றங்களை மனமார உணர்ந்து, இந்த வாழ்க்கை முறைக்கு மாறிவிட்டோம். பணிமனையில் இருந்த ஒருவார காலம், எங்கள் பழக்கங்களை எளிதாக மாற்றிக்கொள்ள முடிந்தது. அதுவே நாங்கள் வீட்டிற்கு வந்தபிறகும், அப்படியேத் தொடர்ந்து கடைபிடிக்க உதவியது. ஆகவே, புதிதாக இயற்கை வாழ்வியலுக்கு மாற விரும்புபவர்கள், படிப்படியாக பழக்கவழக்கங்களை மாற்றுவது நல்லது. ஒருவேளை நீங்கள் மிகவும் மனதிடம் மிக்கவராக இருந்து, ஒரேடியாக எல்லாப் பழக்கவழக்கங்களையும் மொத்தமாக மாற்றினாலும், ஒருசில நாட்களிலேயேத் தேவையற்ற மனக்குழப்பங்கள் ஏற்பட்டு, ‘இயற்கை வாழ்வியலைப் பின்பற்றுவது மிகவும் கடினம்’ எனும் எண்ணம் தோன்றி, இந்த முயற்சியையே கைவிடுவதற்கான சூழல் ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான், நீங்கள் படிப்படியாக பின்பற்றுவதற்கான எளிய வழிமுறைகளை இந்தப் பகுதியில் தரவிருக்கின்றோம். இவ்வழிமுறைகள் அனைத்தும் எங்கள் சொந்த அனுபவத்திலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன.
ஒரு படியிலிருந்து அடுத்த படிக்கு செல்வதற்கு எந்த கால அவகாசத்தையும் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. அது எவ்வளவு காலம் என்பதை, ஒவ்வொரு தனி நபரும், அவரவருடைய, தன்னம்பிக்கையையும், புரிந்து கொள்ளும் தன்மையையும் வைத்து முடிவு செய்து, அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேறலாம்.
முதல் படி - குளிர்சாதனப் பெட்டியை நிரந்தரமாக நிறுத்துதல்:
நமது வீட்டில் குளிர்சாதனப் பெட்டி உபயோகத்தில் இருக்கும்வரை, அது மீந்து விட்ட உணவுகளை பதப்படுத்தி மீண்டும் உண்பதற்கும் மற்றும் இரண்டு மூன்று நாட்களுக்கு மேலாகத் தேவைப்படும் என்பதற்காக சில உணவுகளை முன்னதாகவே அளவுக்கு அதிகமாகத் தயாரித்து வைப்பதற்கும் வழிவகுக்கும். இவ்வாறு பழைய உணவுகளைத் திரும்பத் திரும்ப பயன்படுத்துவது, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மாற விருப்பம் உள்ளவராக இருந்தாலும், அவர்கள் அந்தப் பாதையில் முழுமையாக நடப்பதற்கு மாபெரும் தடையாக அமையும். குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், அவற்றின் இயல்பான தன்மையிலிருந்து மாறிவிடுகின்றன. நாம் உண்ணும் உணவானது, நமது உடலின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, நமது மனதின் ஆரோக்கியத்தையும், அதாவது நமது குணத்தையும் நிர்ணயிக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. உணவின் குணங்களைக் குறித்து அதிகத் தகவல்களைப் பின்வரும் வலைப்பதிவுகளில் பார்க்கலாம்.
தற்சமயம் இயற்கை வாழ்வியலில் முதல்படியாக, குளிர்சாதனப் பெட்டியை நிரந்தரமாக அணைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்குப் பலவகையான கேள்விகள் எழும். அக்கேள்விகள் ஒவ்வொன்றிற்கும், இயற்கையின் துணை கொண்டு, அக்கறையுடனும், தேவையான மெனக்கெடலுடனும் நீங்களே விடை காண முயலுங்கள். இம்முயற்சி உங்களுக்கு, மனதாலும் உடலாலும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தைத் தரும்.
குறிப்பு:
குளிர்சாதனப் பெட்டியை நிறுத்திய பின்னர், அதை எம்மாதிரியான பயன்பாட்டிற்கு உபயோகிக்கின்றீர்கள் எனும் தகவலை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments :
Post a Comment